உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி நபர் ஒருவர் செலுத்திச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் கட்டளையிட்ட போதிலும், அதன் சாரதி பொலிஸ் அதிகாரிகளை மோதி ஆபத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதனையடுத்து, பொலிஸார் உழவு இயந்திரத்தின் சக்கரத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
கடந்த 24 ஆம் திகதி இச்சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டினால் உழவு இயந்திரத்தின் சக்கரம் சேதமடைந்துள்ளது.
குறித்த உழவு இயந்திரத்தை செலுத்திய 18 வயதுடைய இளைஞனும் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
