உழவு இயந்திர விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
அநுராதபுரம் கவரக் குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டி சில்லுக்குள் அகப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் கவரக் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கவரக் குளம் பொலிஸ் பிரிவின் நாச்யாதுவ குளத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை (13) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஹத்தேஎல,ஹிதோகம பகுதியை வசிப்பிடமாக கொண்ட 55வயதுடய குடும்பஸ்தர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்தினை குளத்து பகுதியில் இருந்து மேலே எடுப்பதற்கு முயற்சித்த போது உழவு இயந்திரம் பின்நோக்கி வந்தபோது சாரதிக்கு உழவு இயந்திரத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போனதில் இழுவைப் பெட்டியின் சில்லு க்குள் அகப்பட்டு சம்பவயிடத்திலேயே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார் என்பது மேலும் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளது டன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் கவரக் குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.