நெடுந்தீவில் எரிபொருள் நிலையம் ஸ்தாபிப்பு


இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று (5) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டம் இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், நெடுந்தீவு வாழ் மக்கள் கொழும்பில் உள்ள அதே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

தற்போது, தீவகத்தில் உள்ள மின்பிறப்பாக்கிக்கு எரிபொருளை கொண்டு செல்ல சுமார் ஏழு மணிநேரம் எடுப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் செயற்படத் தொடங்கியவுடன், 45 நிமிடங்களுக்குள் எரிபொருளை வழங்கக்கூடிய வசதி கிடைக்குமெனவும் இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக பூர்த்தி செய்யப்படும் என்றும், முதல் கட்டத்திற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 50 மில்லியன் ரூபாவை முதலீடு செய்யுமென்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மற்றும் மத ஒற்றுமைக்கு உறுதியளிக்கும் அரசாங்கத்தின் கீழான ஒருங்கிணைந்த முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்தை இந்த வளர்ச்சி குறிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நயினாதீவு அம்மன் கோவில் வரை மக்கள் சமாதானமாகவும் ஒரே படகிலும் ஒன்றாகப் பயணிக்கக்கூடிய ஒரு காலத்தை இந்த நிர்வாகம் உருவாக்கியுள்ளது.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *