யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி ரகுராம் பதவி விலகியது இராணுவ புலனாய்வார்களின் சூட்சுமம்
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி ரகுராம் பதவி விலகியமைக்கு பின் இராணுவ புலனாய்வார்களின் சூட்சியே காரணமாக இருக்கலாம், அடுத்த துணைவேந்தராக வரும் தகுதி ரகுராம் அவர்களுக்கே உள்ளது என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்றைய தினம் (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ். பல்கலைக்கழகம் என்பது எமது சமூகத்துக்கான ஒரு மையமாகவே திகழ்கின்றது. பல்கலைக்கழகத்துக்கு கல்வி கற்க செல்கின்ற மாணவர்களை வெறுமனே கல்வியை மாத்திரம் கற்றுவிட்டு வாருங்கள் என்று நாங்கள் அனுப்பவில்லை. பல்கலைக்கழகத்தில் அவர்கள் தங்களது வாழ்வியல் சார்ந்த ஒழுக்கங்களை கற்று வரவேண்டும் என்றே எதிர்பார்த்துள்ளோம். பல்கலைக்கழகத்தில் பகிடி வதை என்பது ஒருவரின் மனம் நோகாமலும், அவர்களின் உடல் சார்ந்த துன்புறுத்தல் இல்லாமலும் மேற்கொள்ளவேண்டும்.
ஆனால் இதற்கு மாறாகவே தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்றது. கடந்த காலங்களில் இதுதொடர்பாக நாங்கள் அவதானித்து வந்ததுடன், பல விமர்சனங்களையும் முன்வைத்திருந்தோம். இந்த மாணவர்கள்தான் எதிர்காலத்தில் ஆசிரியர்களாக, அதிபர்களாக, இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவதற்கான வாய்ப்புகளை கொண்ட ஓர் கல்விச் சமூகம்தான் இந்த பல்கலைக்கழகம். இவ்வாறான நிலையில், அண்மையில் யாழ்.
பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி ரகுராம் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யும் அளவுக்கு தூண்டப்பட்டுள்ளார். இது ஒரு வருத்தத்துக்குரிய விடயம். இது இன்று நேற்று அல்ல. கடந்த காலத்தில் இராணுவ புலனாய்வாளர்களின் தூண்டுதலில் விரிவுரையாளராக கடமையாற்றிய குருபரன் பதவி நீக்கப்பட்டமை தொடர்பிலும் இந்த இடத்தில் நினைவு மீட்டிக்கொள்ள வேண்டும். அவர் இருந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம், வன்முறைகள் செய்ய முடியாத அளவுக்கு அவர் அவர் நியாயமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
அவர் வெளியேற்றப்பட்ட பின்னர் பல்கலைக்கழக தரப்பில் எந்தவித எதிர்வினையும் ஆற்றப்படவில்லை என்பது குறையாக உள்ளது. எமது பிள்ளைகள் நல்ல சமூகமாய் உருவாகுவதற்கு குருபரன் போன்ற விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகத்தில் நிறுக்கவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கை அரசினது புலனாய்வாளர்களினதும் திட்டத்தால் அவர் நீக்கப்பட்டார். அதேபோல், இப்பொழுது கலைப்பீட பீடாதிபதி ரகுராம் இராஜினாமா செய்துள்ள விடயம், அடுத்த துணைவேந்தராகும் வாய்ப்பு அவருக்கு இருக்கின்றது என்பதால், அவரை இதி லிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் சிறந்த முறையில் தனது பணிகளை ரகுராம் மேற்கொண்டிருந்தார். நாங்கள் கூட பகிடிவதை தொடர்பான விடயங்களை அவரிடம் முன்வைக்கும்போது அவர் அதற்கான தீர்வுகளை பெற்றுத்தந்தார். தற்போதைய துணைவேந்தருடன் எதுவுமே பேசமுடியாத நிலைதான் காணப்படுகின்றது. அவரது உலகம் வேறாகவே காணப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வெறுமனே மதம் சார்ந்த கூட்டங்களில் அறம் சார்ந்து மாத்திரம் பேசுகிறார். அறம் சார்ந்து சிந்திப்பதில்லை.
பெண்கள் விரிவுரையாளர்களாக வரக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இந்த நிலையில், அடுத்த துணைவேந்தராக இள வயதில் வந்துவிடுவாரோ என்ற பயத்தில், இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் முறைதவறி போவதை கண்டித்தார் என்பதற்காக அவரை பதவி விலக தூண்டுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.” – என்றார்.