மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (27) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இன்றைய போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் பங்கேற்றிருந்தனர்.
குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டம் ஆரம்பமானது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான போராட்டம் மாலை 4.30 அளவில் நீராகாரம் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.