உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு செயலமர்வு


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஆவணங்கள் விநியோகித்தல் மற்றும் பாரமெடுத்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர், எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்படவுள்ள 35 நிலையங்களிலிருந்து 517 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் அதற்குரிய ஆவணங்களையும் விநியோகிக்கும் மற்றும் பராமெடுக்கும் நிலையமாக செயற்படவுள்ளது எனவும், அவ் நிலையங்களுக்கு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமிக்கப்படும் அலுவலகர்களின் பங்களிப்பானது மிகவும் முக்கியத்துவமானது எனத் தெரிவித்தார்.

மேலும், 05 ஆம் திகதி அன்று காலை 07.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு சமூகமளித்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு உரிய வகையில் வாக்குப் பெட்டிகளையும் ஆவணங்களையும் கையளிக்கும் அதேவேளை 06ஆம் திகதி பி.ப 05.00 மணியிலிருந்து வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களால் கையளிக்கப்படவுள்ள வாக்குப் பெட்டிகளையும் ஆவணங்களையும் உரிய வகையில் பெற்றுக்கொள்வதில் மிக வினைத்திறனாக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், இத் தேர்தலில் சிறப்பாக அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற சிறப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இச் செயலமர்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ. சசீலன் அவர்களால் வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் பாரமெடுத்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இச் செயலமர்வில் களஞ்சியத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரான பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன் கலந்து கொண்டார்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *