யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள்


யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபவனி, சஞ்சிகை வெளியீடு, பழைய மாணவர்கள் இடையேயான காற்பந்து மற்றும் துடுப்பாட்டப் போட்டிகள், பாடசாலைகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொண்டாட்ட நிகழ்வுகளை நடைபவனி மற்றும் கல்லூரி பரிசளிப்பு விழா என இரண்டு தினங்களையும் அண்மித்து இரண்டு கட்டங்களாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக இடம்பெறும் நடைபவனியானது கல்லூரிக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்மைக்காலமாக அதிகளவில் ஏற்படும் தொற்றா நோய்களை தடுத்தல் எனும் தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு நடைபவனி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

நடைபவனியானது எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி காலை 8 மணிக்கு கல்லூரியிலுள்ள சிற்றாலயத்தில் அமைந்துள்ள பத்திரிசியாரின் உருவச் சிலைக்கு முன்பாக ஆரம்பமாகி சென் பற்றிக்ஸ் வீதியூடாக பிரதான வீதியை அடைந்து பிரதான வீதியூடாக பஸ்ரியன் சந்தியை அடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி வழியாக கார்கில்ஸ் சந்தியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு வீதியூடாக எமது கல்லூரியின் புகழ்பூத்த அதிபர்களில் ஒருவரான வணபிதா லோங்கினுடைய உருவச் சிலை அமைந்துள்ள யாழ் பொது நூலகத்தை அடைந்து அங்கு சிறிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

குறிப்பாக வணபிதா லோங்கினுடைய உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அங்கிருந்து பிரதான வீதியூடாக குறித்த நடைபவனியானது மீண்டும் கல்லூரியை வந்தடையவுள்ளதுடன் அங்கு கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது என்றார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பிக்க கல்லூரி நிர்வாகத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *