முஸ்லீம் பெண் உறுப்பினர் றிபைன் பாத்திமா றிஸ்லாவின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி


ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய மனிதன் சுயநலத்தை விட்டொழித்து தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என யாழ் மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் உறுப்பினர் றிபைன் பாத்திமா றிஸ்லா தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் அந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிங்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக இத்தினத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை விதைக்கும் ஹஜ் கொண்டாட்டம் உலக அமைதிக்கான சிறந்த செய்தியையும் தரும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகத் திருநாளை கொண்டாடும் வேளையில் உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் எதிர்நோக்கப்படும் சவால்களுக்கு துணிச்சலோடு முகம்கொடுத்து அவற்றை முறியடித்து வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுவதுடன் மனித குலத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒரே இலக்கில் ஒன்றுபடும் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இலங்கை மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் அடுத்த மனிதனை நேசிக்கப் பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும். சக மனிதனை நேசிக்க முடியாதவர்களால் இறைவனை நேசிக்க முடியாது. அடுத்தவர் மீது நாம் வைக்கும் அதீதமான நேசம்தான் நம்மிடம் தியாக குணத்தை வளப்பதற்கு வழிவகை செய்கிறது.

ஹஜ் என்கிற வரலாறு – நமக்கு வெறும் மார்க்கக் கடமையினை மட்டும் கற்றுத் தரவில்லை. அந்த வரலாற்றில் நமக்குப் படிப்பினையாக ஏறாளமான விடயங்கள் இருக்கின்றன.

அவற்றினை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்துவோமேயானால் – இந்த உலகிலும், மறுவுலகிலும் நமது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைந்து விடும்.

நமக்கு விருப்பமானவற்றை இறைவனுக்காகவும், சக மனிதனுக்காகவும் தியாகம் செய்யுமாறு இஸ்ஸாம் கூறுகிறது.

இன்று நம்மிடையே ஏராளமானோர் வறுமையோடு போராடிக் கொண்டு வாழ்கையைக் கடத்திக் கொண்டிருப்பதை இந்தத் தியாகத் திருநாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவர்களுக்கு நம்மாலானா உதவிகளைச் செய்வதனூடாக நாம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.ஹஜ்ஜின் போதனைகள் – ஹஜ் பெருநாள் தினத்துக்கு மட்டுமானதல்ல.

நமது வாழ்க்கை முழுவதும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அன்பும், தியாகமும் கொண்ட வாழ்க்கையானது மகிழ்ச்சி நிறைந்ததாகும்.

எனவே, இப்றாகிம் நபியவர்களின் தியாகத்தைப் போற்றி நினைவு கூரும் இந்த நாளில், நமக்குள்ளும் அவ்வாறானதொரு தியாக குணத்தை வளர்த்துக் கொள்வதற்கு இன்றைய நாளில் உறுதிகொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாறுக் ஷிஹான்


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *