முல்லைத்தீவில் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிக்கும் நிலையம் திறப்பு
கனேடிய தமிழர் பேரவையின் செயற்திட்டங்களில் ஒன்றான உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியின் ஆரம்பக்கட்டமாக Made in Mullaitivu உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிக்கும் நிலையம் திங்கட்கிழமை (24) முல்லைத்தீவு மாவட்ட புதிய பஸ் நிலையத்தின் அருகாமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போரினால் அதிகமாக பாதிக்கப்பட்டதோடு இன்று வரை மிக அதிகமான வறுமை நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் சிறு தொழில் செய்யும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் அதிகமாக வாழ்ந்து வருவதோடு பன்முகத்தன்மை வாய்ந்த பல உற்பத்திப்பொருட்களையும் தயாரித்து வருகின்றனர்.
ஆனாலும் சந்தைப்படுத்தல் வசதிகள் இல்லாததால் அவர்களின் உழைப்பிற்கும் உற்பத்திப் பொருட்களுக்குமான சரியான இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர்களினதும், உள்ளூர் உற்பத்தியாளர்களின் வேண்டுகோளின்படி கனேடிய தமிழர் பேரவை உள்ளூர் உற்பத்தியாளர்களிற்கு உதவும் வகையில் இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்துவைத்துள்ளது.
Made in Mullaitivu (மேட் இன் முல்லைதீவு) செயற்திட்டம் மூலமாக உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதோடு உற்பத்தியாளர்களுக்கு அகில இலங்கை ரீதியிலும் சர்வதேச சந்தையிலும் சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியும்.
இது வெற்றிபெறும் பட்சத்தில் நிலையான பொருளாதார கட்டமைப்பொன்றை வடக்கு கிழக்கில் உருவாக்க முடியும். தாயக உற்பத்தியாளர்களை ஊக்குவித்து வடக்கு கிழக்கில் உள்ள உற்பத்தியாளர்களிற்கு அவர்களது உற்பத்திகளை ஆதிகரிக்கவும், ஆலோசனைவழங்கவும், சந்தப்பரப்பை விரிவாக்கவும் இந்த செயற்திட்டம் உதவியாக அமையும்.
இந்த திறப்பு விழாவின் பிரதம விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன், வவவுனியா பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் பீடத்தின் பீடாதிபதி நந்தகோபன், கனேடிய தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குனர் டாண்டன் துரைராஜா, கனேடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் மற்றும் இத்திட்ட நன்கொடையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மலர் மாலைகள் அணிவித்து இனிதே வரவேற்கப்பட்டனர். அதன் பின்னர் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த உள்ளூர் தயாரிப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் இந்த திட்டத்தின் முக்கிய ஆதரவாளர்கள் இணைந்து மங்கள விளக்கினை ஏற்றிவைத்தனர்.
இதன்பின் உமாமகேஸ்வரன், நந்தகோபன், மற்றும் டாண்டன் துரைராஜா ஆகியோரால் அதிகாரப்பூர்வமாக Made in Mullaitivu உள்ளூர் தயாரிப்பாளர்கள் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிக்கும் நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிகாரி உமாமகேஸ்வரன் தனது உரையில் முல்லைத்தீவின் நிலைமையை ஜப்பானுடன் ஒப்பிட்டு பேசினார். யுத்தக் கொடூரத்திற்குப் பிறகும், உலகின் முன்னணி பொருளாதாரமாக ஜப்பான் உருவாகியதை அவர் எடுத்துக்காட்டாக முன்வைத்து, Made in Mullaitivu போன்ற முயற்சிகள் முல்லைத்தீவின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதை வகுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வவுனியா பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் பீடத்தின் பீடாதிபதி நந்தகோபன், உலக சந்தைக்கு முன்னதாக இலங்கைக்குள் உள்ளூர் சந்தையை உறுதிப்படுத்துதல் முக்கியம் என்பதை வலியுறுத்தினார். முதலிலேயே உள்ளூர் சந்தையில் வலுவான நிலைப்பாடு உருவாக்கி பின்னர் உலகளாவிய வர்த்தகத்திற்கு முன்னேற வேண்டும் என்று உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இருவரும் கனேடிய தமிழர் பேரவை, NEED மையம், மற்றும் கனேடிய நன்கொடையாளர்களுக்கு இந்த முயற்சியில் அவர்கள் வழங்கிய உறுதிப்பாட்டிற்காக தனது நன்றியை தெரிவித்தனர்.
கனேடிய தமிழர் பேரவையின் இலங்கைக்கான மனிதாபிமான திட்ட ஒருங்கிணைப்பாளர் துஷி ஆர். துரைரத்தினம், தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், உள்ளூர் மக்கள் அவர்களின் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஆதரிக்க வேண்டும் என்பதையும், வெளிநாட்டில் உள்ள தமிழ் மக்கள் இலங்கைக்கு வரும்போது இந்த மையத்தை நேரில் வந்துபார்வையிடுவதோடு இந்த உள்ளூர் உற்பத்திகளை ஆதரிக்க வேண்டும் என்றும் பொருட்களை வாங்கி வெளிநாடுகளில் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் பிரதீபன் சோதிலிங்கம் தனது நன்றியுரை வழங்கியபோது, இந்த திட்டத்தை வெற்றிப்படுத்த முக்கிய பங்கு வகித்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் தாயகமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, சிறந்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்கிக்கொடுப்பதோடு வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும், உள்ளூர் உற்பத்தியை மேலும் ஊக்குவிக்கவும் முடியும். அனைத்து வளங்களும், கடின உழைப்பாளிகளும், சிறந்த உற்பத்தியாளர்களும் உள்ள எம் பிரதேசங்களில் வாழும் மக்களிற்கு இந்தத்திட்டம் பல வகையிலும் உறுதுணையாக அமையும் என நாங்கள் நம்புகின்றோம்.