யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள் வழமைக்கு திரும்பியது


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் (01) மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கி இருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் வைத்தியர்கள் சேவைக்கு திரும்பியுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் பலரும் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி திரும்பிச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் வைத்தியர் சங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவர்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டது.

இதனையடுத்து பொது மக்களின் நலன் கருதி தமது பணிப்புறக்கணிப்பை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ள போவதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.

இதற்கமைய போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் அனைத்தும் இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக பெரும் அவதியை எதிர்நோக்கியிருந்த நோயாளர்கள் பலரும் இன்று தமக்கான சிகிச்சைகளை பெற்றுக் கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நோயாளர்களைப் பாதிக்காத வகையில் வைத்தியசாலையின் அனைத்து தரப்பினர்களும் செயற்பட வேண்டுமென நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *