இல்ல அலங்காரங்களுக்கு தடை


யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நேற்று (20) நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின்போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பாடசாலையில் கடந்த வருடம் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்றபோது இல்லங்கள் கார்த்திகைப் பூ மற்றும் பீரங்கி அமைப்பு போன்ற வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாடசாலையின் நிர்வாகத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அந்த விசாரணைகள் இதுவரை முடிவுக்கு வரவில்லை.

இது இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு இல்லங்களுக்காக போடப்பட்ட பந்தலில் அலங்காரங்கள் செய்வதற்கு பாடசாலை நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டதாக பாடசாலையின் நெருங்கிய தரப்பினரால் குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன் சாதாரண அலங்காரம் கூட செய்ய வேண்டாம் என தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அலங்காரம் செய்வதற்கு முயன்ற பழைய மாணவன் மீதும் ஆசிரியர் ஒருவர் நேற்று தாக்குதல் நடாத்தியதில் அந்த மாணவன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் யமுனாவை தொடர்புகொண்டு வினவியவேளை, தாங்கள் அலங்காரங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கவில்லை என கூறியதுடன் தாக்குதல் சம்பவம் குறித்தும் இதுவரை தகவல் வெளியாகவில்லை என தெரிவித்தார்.

இது குறித்து பாடசாலை அதிபரை தொடர்புகொண்டு வினவிய வேளை, மாணவர்கள் கடந்த ஆண்டு வீட்டில் வைத்து அலங்காரங்களை செய்துவிட்டு அதனை கொண்டு வந்து இல்லங்களை அலங்கரித்ததால் பாரிய பிரச்சினை ஏற்பட்டது. அந்த விசாரணைகள் இதுவரையும் முடியவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம்.

இல்லங்கள் எல்லாம் இந்த ஆண்டு திருப்திகரமாக தான் அமைக்கப்பட்டது. இல்ல அலங்காரங்களுக்கு புள்ளிகளும் வழங்கினோம். எம்மீது குற்றம்சாட்டிய தரப்பினர் யார் என்று கூற வேண்டும். அவ்வாறு கூறாமல் செய்தி பிரசுரித்தால் அந்த செய்திக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வேன்.

இந்த ஆண்டு, அலங்காரங்கள் குறித்து எந்த தரப்பினராலும் எமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை. அத்துமீறி உள்நுழைந்து அலங்காரம் மேற்கொண்ட பழைய மாணவரை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அவர்மீது நாங்கள் தாக்குதல் நடாத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *