5ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்


வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினம் (29) ஐந்தாவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்த போராட்டம் யாழ். செம்மணியில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தியவாறு போராட்டம் ஆரம்பமானது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம்”, “தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *