யாழில் 17 சுயேட்சை குழுக்களை இணைத்து ஐக்கிய தமிழர் ஒன்றியம் ஆரம்பம்
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட 17 சுயேட்சை குழுக்களை ஒன்றிணைத்து “ஐக்கிய தமிழர் ஒன்றியம்” இன்று (25) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

அங்குராப்பண நிகழ்வில் சிறீந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய தலைமைகளின் அசரட்டியான நிலைப்பாட்டால் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இந்த நிலையை எதிர்காலத்தில் தவிர்க்கும் நோக்கில், கடந்த தேர்தலில் போட்டியிட்ட 17 சுயேட்சை குழுக்களின் முதன்மை வேட்பாளர்களை ஒன்றிணைத்து “ஐக்கிய தமிழர் ஒன்றியம்” உருவாக்கியுள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார இலக்குகளை அடைவதே எமது முக்கிய நோக்காகும் எனக் கூறினார்.
சுயேட்சை குழு 15 இல் போட்டியிட்ட செந்தில்மதி கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் எதிர்பார்த்த இலக்குகளை தமிழ் தேசிய அரசியல்வாதிகள் நிறைவேற்றவில்லை என்பது மக்களின் முக்கிய குற்றச்சாட்டாகும். இதன் விளைவாக, மக்களின் வாக்குகளை சிதறடிக்காமல் தடுத்து, அவர்கள் பலத்தை ஒன்றாகக் காட்டுவதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ். தேர்தல் தொகுதியில் 17 சுயேட்சை குழுக்களை ஒன்றிணைத்த இத்திட்டம் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளதுடன், வடக்கு, கிழக்கு, மலைகயம், மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலும் அதன் செயற்பாடுகள் விரைவில் விரிவடையும்.
இந்த அமைப்புடன் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள், கே.கே.எஸ் வீதி, கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.