Jaffna 360 Jaffna 360 Jaffna 360 Jaffna 360
    Jaffna 360 > Valikamam > Kovil > Sri Pararasasekara Pillaiyar Kovil
This content requires Adobe Flash Player and a browser with JavaScript enabled.
.
  நண்பருக்கு அறிமுகம் செய்ய/ Refer to Friend  
Phone No:  Address: Sri Pararasasekara Pillaiyar Kovil Madathu Vasal, Inuvil South, Inuvil
Jaffna Railway Station
Neervely Arasakesari Pillaiyar Kovil
Selva Sannithy Kovil
Keraitivu - Sangupiddy Bridge

“ஏரார் இணுவில்வாழ் எந்தை கணபதியின்
தாரார் திருவடியைத் தாழ்பணிந்தோர் - ஆரா
அமிழ்தம்போல் வாழ்வர் அருட்செல்வம் சூழ்வர்
தமிழுள்ளளவுந் தழைத்து”


-திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

இணுவில்

சைவமும் செந்தமிழும் தழைத்தோங்கும் புராதன வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமே இணுவை யெம்பதியாகும். ஈழத்திருநாட்டின் மணிமகுடமாம் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் ஆகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து சுமார் நான்கு மைல் தூரத்தில் இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்செல்லும் நெடுஞ்சாலையானது இணுவில்க் கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்றது. சுமார் 650 ஏக்கர் நிலப்பரப்பளவை உடைய அழகிய சிறிய ஒரு கிராமமே இணுவில். இங்குள்ள பெருங்குடிமக்கள் சைவத்ததையும், தமிழையும், தமது இரண்டு கண்களாக போற்றி வளர்த்து வருகின்றார்கள்.

இணுவில் கிராமமானது ஆதிகாலத்தில் குளத்தங்கரை நாகரீகத்திற்கு பெயர்போன குடியிருப்பபக்களில் ஒன்றாகும். “இணையிலி” என்ற பெயரே இணுவில் ஆக மருவி வந்திருக்கின்றது. தவிர இணுவில்;, என்பது முங்கில் அடர்த்தியாக இருந்த படியாலும் இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம். இக்கிராமமானது தற்போதும் பனை, தென்னை, வாழை, மா, பலா, போன்ற கனிமரங்களைக் கொண்டு பசுமையாகவே காட்சி தருகின்றது. இங்கு பயிர் செழித்து வளர்வதற்கு ஏற்ற செம்மண் உடைய விவசாய நிலங்களைக் கொண்ட பூமி இது.

தமிழரசர் காலத்தில் திருக்கோவலூரில் இருந்து வருவிக்கப்பட்ட, பேராயிரமுடையான் எனும் வேளாளனும், அவனது பரிவாரத்தினரும் இணுவிலில் குடி அமர்த்தப்பட்டார்கள் என்று ~~யாழ்ப்பாண வைபவமாலை~~ எனும் வரலாற்று நூல் கூறுகின்றது. அப்போது பேரூர்களாக விளங்கிய பன்னிரண்டு ஊர்களில் இணுவில்க் கிராமமும் ஒன்றாகும்.

தெற்கே பிள்ளையாரையும், மேற்கே கந்தசுவாமியாரையும், கிழக்கே சிவகாமி அம்மன், காரைக்கால் சிவன் கோயில்களையும் மேலும் பல தலங்களையும் கொண்ட, திருக்கோயில்களாலே சூழப்பட்ட தெய்வீக மணம்பரப்பும் கிராமம் இது. இங்கு வாழ்கின்ற மக்கள் சிறந்த கலைஞர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், தான,தர்ம காரியங்களில் ஈடுபடும் தர்மவான்களாகவும், ஒழுக்கசீலர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஸ்ரீ பரராஐசேகர மன்னன்

இணுவில் ஸ்ரீ பரராஐசேகரப்பிள்ளையார் திருக்கோயில் வரலாறு என்பது நல்லூரை தலைநகராகக்கொண்டு யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் அரசாண்ட காலத்தில் இருந்து தொடங்குகின்றது. இவர்கள் பரராஐசேகரன், செகராஐசேகரன் என்ற சிம்மாசனப் பெயர்களைக் கொண்டும், சிங்கை நகரை, யாழ்பாண இராட்சியத்தின் தலைநகராகக் கொண்டும் நல்லாட்சி புரிந்து வந்தனர். இவர்கள் “சிங்கை” என்ற ஆரியப்பட்டத்தை சுருக்கி தம்பெயர்கட்கு முன்னால் இட்டுக்கொண்டார்கள். “சிங்கைப்பரராஐசேகரன்.” (இரண்டாம் தமிழ்ச்சங்கம் இவன்காலத்தில் நிறுவப்பட்டதெனவும், “இரகுவமிசம்” இக்காலத்தில் இயற்றப்பட்டதெனவும் இராசநாயகம் முதலியார் உடன்படுகின்றார். யா.ச.ப-77)

ஆதிச்சிங்கை நகர்

தமழ் அரசர் ஆட்சிக்காலம். சிங்கை ஆரியன் (விஐயகூளங்கைச்சக்கரவர்த்தி) முதற்கொண்டு கி.பி 948ல் இருந்து பதினொராவது தலைமுறைச்சேர்ந்த கனகசூரிய சிங்கையாரியன் 1440 – 1450 வரை என அறியமுடிகிறது. (வைபவமாலை,ப26) “சிங்கை” எனும் தலைநகர்ப்பேரும், சாதிக்காரன் எனும் பொருளில் வரும் “ஆரியன்”, என்ற பெயரையும் சேர்த்து “சிங்கையாரியன்” என்ற பெயரை வைத்துக்கொண்ட இவர்களது குலம் ஆரியச்சக்கரவர்த்திகள் குலம் என அழைக்கப்பட்டது. இவர்கள் ஒருவர்பின் ஒருவராக தலைநகரை மாற்றாது இந்த நீண்ட காலத்திற்கு ஆட்சிபுரிந்து வந்தனர். 1450ல் கொழும்பு கோட்டையை ஆண்ட செண்பகப்பெருமான் எனும் அரசன் படையெடுப்பில் கனகசூரிய சிங்கையாரியன் தோற்று தமிழகம் சென்றான். செண்பகப்பெருமானால் நியமிக்கப்பட்ட விஐயவாகு என்ற சிங்களப் பிரதிநிதி (மன்னன்) பதினேழு ஆண்டுகள் வரை தமிழர்களை அடக்கி,யொடுக்கி அரசாண்டான். (யா.வை.மா.-45) போரில் தோற்று காசி யாத்திரை செய்த கனகசூரிய சிங்கையாரியன் திருக்கோவலூர் சென்று அங்கு கல்வி பயின்று கொண்டிருந்த தம் பிள்ளைகளான பரராஐசேகரன், செகராஐசேகரன் உடன் சேர்ந்து மீண்டும் படையெடுத்தான்.

கனகசூரிய சிங்கையாரியன் பாண்டிய சிற்றரசர்களின் உதவியுடன் விஐயபாகு மீது மீண்டும் படையெடுத்து பெரும்சமர் பண்ணினாhன். செகராஐசேகரன் ஒரு அணியாக சண்டைசெய்ய, பரராஐசேகரன் அஞ்சாநெஞ்சனாக தனது வாள்ப்படையுடன் விஐயபாகுடன் பெரும் யுத்தம் செய்து அவனை தன் வாளுக்கு இரையாக்கினான். மீண்டும் சிங்கைநகர், சிங்கையாரியர் வசமாகியது. பரராஐசேகரன் தனது தந்தை கனகசூரியஆரியனை ஆட்சியில் வைத்து தான் தேசவிசாரணை செய்ய முயன்றான். அனால், பிதாவாகிய கனகசூரியன் பரராஐசேகரனை அரியணை ஏற்றி தான் இளைப்பாறினான். இது தமிழ் அரசர்களின் இரண்டாவது ஆட்சிக்காலம் என்று கூறலாம்.

கனகசூரியன் - கி.பி- 1467.
பரராஐசேகரன்- கி.பி- 1478.
சங்கிலி - கி.பி- 1519.

இவர்கள் 1620 வரை சுதந்திரமாக ஆட்சி புரிந்தார்கள். அதன்பின் போத்துக்கேயர் வருகை ஆரம்பமாகியது.

இந்த ஆரியச்சக்கரவர்த்திகள் வரிசையில் ஸ்ரீ பரராஐசேகரமன்னன். இவன் நல்லூரை தலைநகராக கொண்டு நீதிநெறி தவறாது நல்லாட்சி புரிந்து வந்தான்.; சிங்கைப் பரராஐசேகரன் என்று அழைக்கப்பட்ட இவன் மக்களிடையே அன்பும் கருணையும் கொண்டவனாகவும், இறைபக்தி மிகுந்தவனாகவும், சிறந்த நிர்வாகத்திறன் உடையவனாகவும், திகழ்ந்தான் என்பது வரலாறு. யாழ்ப்பாண இராட்சியத்தில் ஆரியச்சக்கரவர்த்திகள் மரபில் 1478ம் ஆண்டு இவன் அரியணை ஏறினான். பதினொராவது தலைமுறையைச்சேர்ந்த இவனது ஆட்சிக்காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுகின்றது. இக்காலத்திலோ, அல்லது இதற்கு முன்னைய காலங்களிலோ இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கலாம். தமிழ்ச்சங்கம் நிறுவி சமயம் வளர்த்தது அல்லாமல் “பரராஐசேகரன் உலாவும்”, “இரகுவமிசம்” போன்ற நூல்கள் இவனது ஆட்சிக்காலத்திலே அரங்கேற்றப்பட்டன. தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட வைத்தியர்களைக்கொண்டு “பரராஐசேகரம்” என்ற வைத்திய நூல் ஒன்றும் இவனது ஆட்சிக்காலத்திலே உருவாக்கப்பட்டது. (“செகராசசேகர மாலை,” “தட்சிண கைலாய புராணம்” என்பன சிங்கை நகர் இராட்சியம் பற்றிக்கூறுகின்றன.)

நல்லூரிலே சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த ஆரியச்சக்கரவர்த்திகள் சிறந்த நூலாசிரியர்களாகவும் விளங்கியிருக்கின்றனர். நாயன்மார்க்கட்டு, நல்லூர், இணுவில் போன்ற பன்னிரண்டு ஊர்களும் அறிஞர்கள்;, கலைஞர்கள், புலவர்கள் நிறைந்த பேரூர்களாக திகழ்ந்திருக்கின்றன. இந்த ஆரியச்சக்கரவர்த்திகளுள் சிறந்து விளங்கிய ~~செகராஜசேகரன்~~ என்ற மன்னன் தமிழகத்தில் இருந்து அரியநூல்கள், ஏட்டுச்சுவடிகள், ஆவணங்களையெல்லாம் சேகரித்துக் கொண்டுவந்து ~~சரஸ்வதிமகால்~~ என்ற நூலகத்தை அமைத்தான் என்றும், அறியமுடிகின்றது.

ஸ்ரீ பரராஐசேகரமன்னன் ஆட்சிக்காலத்தில் சமயவழிபாடு, ஆலயம் அமைத்தல் பரிபாலனம் செய்தல் என்பன அக்காலத்தில் அமயப்பெற்றதாக கருதப்படும் கோயில்கள் பற்றின கர்ணபரம்பரைக் கதைகள் மூலமாக அறிய முடிகிறது. மேலும் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் தமது “யாழ்ப்பாண இராட்சியம்” (ப-218) எனும் நூலில் “விநாயகர் வழிபாடு இக்காலத்தில் மேன்மை பெற்று இருந்ததை; ஆரியச்சக்கரவர்த்திகள் அமைத்த காவல் தெய்வங்களில் விநாயகர் ஆலயம் முக்கியம் பெறுவது எடுத்துக்காட்டுகின்றது. இதுமட்டுமின்றி இவர்கள் காலத்துக்குரிய உரும்பிராய் கருணாகரப்பிள்ளையார் கோயில், அரசகேசரி பிள்ளையார்கோயில், இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் ஆகியனவும் இக்காலத்துக்குரிய சிறப்புப்பெற்ற விநாயகர் வழிபாட்டிடங்கள் ஆகும்” என்று குறிப்பிடுகின்றார்.

அந்நியர் ஆட்சி

யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவாத்திகள் கோயில்கள் அமைத்தது பற்றிய செய்திகளை யாழ்ப்பாண வைபவமாலை என்ற வரலாற்று நூலில் இருந்து தெளிவாக அறியமுடிகின்றது. (வைபவமாலை ப26) “ஆதிச்சிங்கையாரிய மன்னன் கீழ்த்திசைக்கு காப்பாக வெயில்உவந்த பிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீரமகாளியம்மன் கோயிலையும், வடதிசைக்கு சட்டநாதர் கோயிலையும், தையல்நாயகியம்மன், சாலைவிநாயகர் கோயிலையும் நாற்றிசையும் கட்டி, உட்பக்கம் அரண்மனை இருந்தகளம் ஆகும்.) இதற்குள்ளேதான் சங்கிலியன்தோப்பு, யமுனா ஏரி இருக்கின்றன. அக்கோயில்களில் இருந்த விக்கிரகங்கள் இப்போதில்லை. பின்வாழ்ந்த மக்கள் பறங்கியரால் இடிக்கப்பட்ட இக்கோயில்களை மீளக்கட்டி விக்கிரகங்களை வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள்.”

பரராஐசேகரப்பிள்ளையார் என்னும் ஆரியச்சக்கரவர்த்திகள் வழிவந்த தமிழ் அரசனின் பெயரை தாங்கி நிற்கும் இவ்வாலயம் ஆனது சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பை பெறுகின்றது. பரராஜசேகர மன்னனால் இவ்வாலயம் கட்டப்பட்டதாகவோ, பரராஜசேகர மன்னனின் மந்திரி பிரதானிகளால் அல்லது பேரூரின் ஆட்சித் தலைவர்களினால் கட்டப்பட்டதாகவோ அன்றியும் பரராஜசேகர மன்னனால் வழிபடப்பெற்று வந்தமையினால் பரராஜசேகரப் பிள்ளையார் என்ற பெயரை பெற்றிருக்கலாம். “அக்காலத்தில் இருந்து நீடித்து நிலைத்திருந்த இக்கோயில் பரராஜசேகரன் சகாப்தத்தில் அரசனது செல்வாக்கையும் ஆதரவையும் பெற்று, அரசனது நாமம் சூட்டபட்டிருக்கலாம்” என்று கூறுகின்றார் தொல்பொருள் ஆய்வாளர் திரு ம.பொ.செல்வரத்தினம். அவர்கள். இணுவில் எனும் பேரூரானது சான்றோர் புகழும் ஆன்றோர்க்கு உறைவிடமாய் சைவவேளாண் மக்கள் வசிக்கப்பெற்றதுமாய, கொன்றையும், கூவிளையும், மருதும், அரசும், தேமாவும், தீம்பலாவும், புட்பங்களுமான வசீகரமிகு நந்தவன பூமியான இணுவையெம்பதியை விநாயகப்பெருமானுக்கு கோயில் எழுப்பும் புண்ணியபூமியாக பரராசேகரன் கருதினான்போலும் அதனாலேயே இங்கு ஆலயம் எழுப்பதுணிந்தனன். என மகாவித்துவான் வை கதிர்காமநாதன் ஆசிரியர் அவர்கள் கும்பாபிசேகமலர்-1972ல் குறிப்பிடுகின்றார்.

பரராஜசேகர மன்னன் ஆட்சிக்குட்பட்ட இணுவில் என்னும் பேரூரானது கரும்பும் பருத்தியும் நெல்வயல்களும், குளங்களுடன் கூடிய கமுகு தென்னை பனை போன்ற வானுயர்ந்த மரங்களுடன் ஒரு பூஞ்சோலைக் கிராமமாக செழிமை மிகுந்து காட்சியளித்தது. பரராஜசேகர மன்னன் தனது மந்திரிப் பிரதானிகளுடன் இணுவையம்பதியினிலே எழுந்தருளி அருள்பாலிக்கின்ற பிள்ளையாரை வணங்கி வந்தான் என்று கர்ணபரம்பரைக் கதைகள் மூலமாக அறியமுடிகின்றது.

யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் “இணுவிலும் ஆரியசக்கரவர்த்தி காலத்தில் ஏற்பட்ட வேளாளர் குடியேற்றத்துடன் தொடர்புடையதாக காணப்படுவதால் இவ்வாலயம் இவர்கள் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம்” என்று தமது யாழ்ப்பாண இராச்சியம் என்ற நூலிலே குறிப்பிடுகின்றார். (ப-220)

முதல்முதலாய் பறங்கியர்கள் 1428ம் ஆண்டு வியாபாரிகளாக பராக்கிரமவாகு மகாராஐhவிடம் உத்தரவு பெற்று இலங்கைக்குள் புகுந்துகொண்டார்கள். நல்லூரிலே கி.பி 1560ம் ஆண்டு போத்துக்கேயருக்கும் சங்கிலி மன்னனனுக்குமிடையே முதலாவது யுத்தம் நடைபெற்றது. சுமார் பதினாறாயிரம் பறங்கியர்களை கொன்று இந்த யுத்தத்தில் சங்கிலி வெற்றியடைந்தான். ஆயினும் காக்கை வன்னியனின் துரோகத்தினால் சங்கில் போர்த்துக்கேயரால் சிறைபிடிக்கப்பட்டான். அவர்கள் காளிகோயில் முன்றலில் அவனை சிதைச்சேதம் செய்து கொன்றார்கள்.(யா.ச.ப.70).;. சங்கிலி குமாரனின் ஆட்சி 1616 – 1620. யாழ்ப்பாணத்தை பல நூற்றாண்டாக ஆட்சிசெய்த சந்ததியாரின் இறுதி அரசன். போர்த்துக்கேயரிடம் போர்க்கைதியானான். இத்துடன் தமிழர் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின் பறங்கியர்கள் சிவாலயங்களையெல்லாம் இடிப்பித்து தமது சமயத்தை பரப்பத்தொடங்கினார்கள்.

மன்னாரும், யாழ்ப்பாணமும் ஒரேஆண்டில் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டன. பறங்கியர்கள் அதிகமாய் தாங்கள் இடித்தழித்த இந்துக் கோயில்கள் இருந்த இடங்களிலே தங்கள் கோயில்களைக் கட்டினார்கள். ஒல்லாந்தரும் அப்படியே அந்த கோயில்களை உபயோகித்தார்கள். பாதிரிமார்கள் கல்வியறிவில்லாத பாமர மக்களிடையே வீடுவீடாக சென்று விவிலிய நூலை முற்றங்களிலே உரல்மீது அமர்ந்து போதித்தார்கள். (யாழ்ப்பாண வைபவமாலை குல சபாநாதன்.) ஆனாலும் அவர்கள் இருந்த உரலை சாணத்தால் சுத்தம்செய்தது கண்டு, தங்கள் நோக்கம் ஈடேறவில்லை என போதகர்கள் மனம் வெதும்பினார்கள்.

இக்காலத்திலே பல கோயில்கள் பறங்கியரால் இடிக்கப்பட்டன. உடுவில் கோவில்பற்றை முற்றுகையிட்ட போர்ததுக்கேயர், இணுவில் என்னும் பேரூர் பரராஜசேகரப்பிளளையார் கோவிலையும் இடிக்கத்தலைப்பட்டார்கள். மன்னனால் வணங்கப்பெற்ற இக்கோயிலை பாதுகாக்க எண்ணிய மக்கள் இங்குள்ள பிள்ளையாரை மறைத்து வைத்து, இத்தலத்தை “மடம்” என்று கூறினார்கள். கோயிலின் முன் மண்டபம் மடம்போன்று காணப்பட்டது. இப்படியாக பாதுகாத்தனர் என்று கர்ணபரம்பரை ஒன்று கூறுகிறது. “மடம்” என்று சொல்லி வணங்கியமையால் இக்கோயிலை “மடத்துவாசல் பிள்ளையார் கோயில்” என்றும் வழங்கலாயினர். இந்த மடத்துவாசல் பிள்ளையார் கோயில் பற்றிய வரலாறு என்பது இந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இப்படியாகத்தான் இருந்திருக்கவேண்டும். இருந்திருக்கின்றது. பூசைகளோ, திருவிழாக்களோ நடைபெறமுடியாமைக்குரிய காலச்சூழலில் இவ்வாலயமானது பாதுகாக்கப்பட்டது. ஆனாலும் போதியபராமரிப்பின்றி ஆலயம் கீலமுற்றுக் கிடந்தது. இக்காலப்பகுதியில் இப்படியாக மட்டும்தான் கொள்ளமுடிகின்றது. சமயஆச்சாரங்களில் மிகவும் ஊறிப்போன ஆச்சாரசீலர்களைக் கொண்ட ஊர் இணுவில் ஆகையால் மதமாற்றம் என்பது இங்கு எள்ளளவும் நடந்ததாக தோன்றவில்லை. ஆனால் இக்காலச்சூழலானது ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்திலே ஓரளவிற்கேனும் மாற்றங்காணத் தொடங்கியது, எனலாம்.

மடத்துவாசல் பிள்ளையார் கோயில்

ஆங்கிலேயர் தங்கள் பலத்தினாலும் நுண்ணறிவினாலும் 1718ம் வருசத்தில் ஒல்லாந்தரிடம் இருந்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றிக் கொண்டர்கள். இவர்கள் முன்னிருந்த அரசுகளைப்போல குடிகளை வருத்தாது சமயசுதந்திரம் பேணினார்கள். சமயம் பரப்பும் விடயத்தில் இவர்கள் மூர்கமல்லாது சாதுரியமான வழிகளை கையாண்டார்கள். வித்தியாசாலைகள் இவர்கள் அனுமதியுடன் எழுந்தன். கல்வியறிவும் விருத்தியடைய தொடங்கியது. சமய அறிவு, பற்று, திருப்பணிவேலைகள் மெல்ல மெல்ல தொடங்கியது. சமயம் பல பெரியார்கள் மூலம் மறுமலர்ச்சி பெறத்தொடங்கியது. இக்காலப்பகுதியில் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் மீண்டும் பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலாக மாற்றங்காணத் தலைப்பட்டது. இம்மாற்றமானது. சமய மறுமலர்ச்சியல்லாமல் சுதந்திர மத வழிபாடுகளாக பரிணமித்தது. 1800 களில் மடாலயமாக இருந்த கோயில் திருத்தி அமைக்கப்பட்டு சுன்ணாம்புக் கற்களால் முறைப்படி கட்டப்பட்டு கும்பாபிசேகமும் நடைபெற்றிருக்கின்றது என்பதை அறியமுடிந்தாலும் சரியான ஆண்டு விபரங்களை பெறமுடியவில்லை.

1800களில் சுன்ணாம்பு கற்களால் ஆன விமானம், கர்ப்பக்கிரகம் உடன் அர்த்தமண்டபம் மகாமண்டபமும் ஆனால் சற்று கிழக்கே சிறிதாக இருந்தன. மூலமூர்த்தியைத் தவிர இங்கு எழுந்தருளிப் பிள்ளையாரும், சண்டேசுவரர் மூர்த்தியும், வைரவரும் அக்காலப்பகுதியில் அடியார்களால் வழிபடப்பெற்றிருக்கின்றது. சுப்பிரமணியரோ வேறுஎந்த தெய்வங்களோ அக்காலப்பகுதியில் இருக்கவில்லை. சதய நட்சத்திரத்தில் கொடியேறி திருவாதிரையில் தேர் இழுத்திருக்கின்றார்கள். புனர்பூசநட்சத்தில் தீர்த்தமும் நடைபெற்று அன்றே கொடிஇறக்கல் திருவிழாவும் நடைபெற்றுள்ளது. திருக்கல்யாணம் இல்லை. ஆனால் தேரடி வைரவர் பொங்கல் நடைபெற்று இருந்தது. அந்தந்த காலச்சூழலுக்கு ஏற்றால்ப்போல் திருவிழாக்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ அன்றியும் சிறப்பாகவோ, ஆனால் ஆகமவிதிப்படி நடைபெற்றிருக்கின்றன.

இந்தக்காலப்பகுதியில் வருடார்ந்த உற்சவங்களைத் தவிர, பல திருவிழாக்கள், உற்சவங்கள், அபிசேகங்கள் என்பன நடைபெற்றுள்ளன. குறிப்பாக விநாயகர் பெருங்கதை 21 நாட்களும் அபிசேகஆராதனைகளுடன் படிப்பும் நடந்துள்ளது. 21ம் நாள் சூரன்போர் நடந்தது. தற்போதைய சூரன் அல்ல, இது பழையசூரன் 1928ம் ஆண்டிற்கு முன்னரே பழுதடைந்து விட்டது. மற்றும் திருவெம்பாவை, ஐப்பசிவெள்ளி, தைப்பொங்கல், வருடப்பிறப்பு, சிவராத்திரி, நவராத்திரி மானம்பூ போன்றன விசேடதினங்களாக அக்காலத்தில் கோயிலில் இடம்பெற்றுள்ளது. இவைதவிர்ந்த தினங்கள் பிற்காலத்திலே தொடக்கம்பெற்றவை ஆகும்.

கோயில் அமைந்துள்ள இடம் தம்பிளாவத்தை என்ற குறிச்சிப்பெயரால் அழைக்கப்பட்டது. (இப்பெயர் தற்பொழுதும் அரச கோவையில் இடம்பெற்று இருக்கின்றது.) கோயிலுக்கு வடக்கே சிறிதாக ஒரு வசந்தமண்டபமும் இருந்தது. தென்கிழக்கு மூலையிலே தலைவிருட்சமான நெல்லிமரமும். தெற்கே தீர்த்தக்கேணியும், அதற்கு சற்று மேற்குத்திசையாக ஓலையால் மேயப்பட்ட பள்ளிக்கூடமும் இருந்தது.(1864) கோயிலின் முன்பக்கம் தற்போதைய பாலமுருகன் கோயிலுக்கு அருகாமையில் இருந்தது கிணறு. திருமஞ்சரக்கிணறு வசந்த மண்டபத்திற்கு மேற்காக இருந்தது. தேர்க்கொட்டகை இல்லாத காரணத்தால் கட்டுத்தேர் ஒன்று கோயிலின் தெற்கு வீதியின் வேலிக்கருகே ஓலையால் மூடப்பட்டநிலையில் இருந்தது. தம்பமண்டபம் கல்த்தூணினால் நிறுவப்பட்டு வேயப்பட்டிருந்தது. கோயிலில் மணியும் இருந்தது. அது தற்போதைய மணிஅல்ல. தற்போதைய வைரவர் கோயிலுக்கு அருகே சற்று உயரத்தில் இருந்தது. கோயிலின் உட்பிரகாரத்தை அதிகாலையில் சாணியால் கூட்டி மெழுகி விடுவார்கள்.
.
பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலின் ஆரம்பம் முதலே இங்கு அந்தணர் குலத்தைச்சேர்ந்த பிராமணர்கள் பூசைகளை நடாத்தி வந்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. தமது வாழ்வை இத்தலத்திற்கே அர்ப்பணித்த அந்தணர் பரம்பரையொன்று தொடர்ச்சியாக இக்கோயில் கிரிகைகளை முறைப்படி செய்து வந்துள்ளார்கள். 1800 களில் திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெற்றுள்ளதிற்கு இங்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன. இங்கு மூலமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் இறைவன் விநாயகப்பெருமானது திருஉருவம் தமிழகத்து சிற்பவிற்பன்னர்களால் அமைக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டது என்று அறியமுடிகிறது. மேலும் அக்காலத்திலேயே மகோற்சவம் நடந்துள்ளது. இங்குள்ள எம்பெருமான் வீதியுலாவரும் மூர்ஷிகம்(எலி வாகனம்) மிகவும் பழமைவாய்ந்த வாகனமாகும் இதுகும் 1867 ;ம் ஆண்டைச்சேர்ந்ததாகும். இங்குள்ள கொடித்தம்ப கவசம் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துருக்கள் அது 1867ம் ஆண்டைச்சேர்ந்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. வாசகம் “இது இணுவில் தம்பிளாவத்தை எனுங்காணியில் எழுந்தருளியிருக்கும் பரராசசேகரப்பிள்ளையார் என்னுங்குருநாமத்திற்கு மெஷகுடிகாலிங்கர் இராமநாதராஐ கொடுக்கப்பட்டது பராமரிப்பும் மயிலர்ஆறுமுகம்.1867”

1928ம் ஆண்டிற்கு முன்னைய பரராஐசேகரப்பிள்ளையார் ஆலயம் எப்படி இருந்திருக்கும் என்பதை இலகுவாக கற்பனை செய்து பார்ப்பதைவிட அக்காலப்பகுதியில் வாழ்ந்த, இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம்மூர் பெரியவர்களிடம் இருந்து அத்தகவல்களை இன்னமும் பெறக்கூடியதாக இருப்பது பலமே!

கும்பாபிசேகம். – 1939 (1928 – 1939 )

இணுவில் பரரபஐசேகரப்பிள்ளையார் வரலாற்றை 1939ம் ஆண்டிற்கு முன், 1939ம் ஆண்டிற்கு பின், என்று இருகாலப்பகுதிகளாக வரையறுத்து நாம் நோக்கலாம். இந்த 1939ம் ஆண்டை ஒரு எல்லை ஆண்டாக நாம் குறிப்பிடுவதற்கு காரணம். வரலாற்று ரீதியாக முதலாவது பாலஸ்த்தாபனம் ஆண்டு இது என்பதனால். 1928ம் ஆண்டு வைகாசி மகோற்சவம் முடிந்தபின்னர் ஆவணிமாதம். பாலஸ்த்தாபனம் செய்யப்பட்ட பின் சுமார் பத்து ஆண்டுகள் திருப்பணிவேலைகள் நடந்திருக்கின்றன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உண்மையான காரணம். நிதிப்பற்றாக்குறைதான். இவ்வூர்மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும், சுருட்டுத் தொழிலாளராகவும், இசைவிற்பன்னர்களாகவும்தான் இருந்திருக்கின்றார்கள். அந்தக்காலசூழல், சமூகநிலை என்பன இக்கோயில்த் திருப்பணிக்கு பலம்சேர்க்கவில்லை. கோயிலை கட்டிமுடிக்கவேண்டும் என்ற எண்ணம், விருப்பம், அவா இருந்தளவிற்கு பொருளாதாரம் கைகொடுக்கவில்லை. வெள்ளைக்கற்களை பொழிந்து கற்கோவிலாக அமைக்கும் பணி இது. மிகவும் சிரமதானமானதொருபணி. கீரிமலையில் இருந்து மாட்டுவண்டிலில் சென்று இதற்கான கற்களை கொண்டுவந்தார்கள். இந்த கற்கள் ஓவ்வொன்றிலும் எம்முன்னோர்களின் வியர்வை படிந்திருக்கும். ஊரிலும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்தார்கள். அராலிச் சிற்பாச்சாரியார்களான நாகமுத்து மாணிக்கம், விசுவலிங்கம், கந்தப்பு, கணவதிப்பிள்ளை ஆகியோர் இப்போதைய கோயிலின் வடமேற்கு மூலையில் நின்ற கொன்றைமர நிழலில் கற்களைப் பொழிந்து கட்டுமானப்பணியை ஆற்றினார்கள். இக்காலப்பகுதியில் பிள்ளையாரை ஒரு சிறிய தகரக்ககொட்டிலில் தம்பமண்டபத்தடியில் வைத்துப்பூசித்து வந்தார்கள்.

மிக நீண்டகாலமாக இத்திருப்பணி வேலைகள் நடந்து வந்தாலும் சிலவேலைகள் பூர்த்தியாகவில்லை 1936ம் ஆண்டு. கர்ப்பக்கிரகமும், விமானமும், அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பூhத்தியான நிலையில், நிருத்த மண்டபம் வெறும் தூணுடன் மட்டும் நின்றுவிட்டது. கர்ப்பக்கிரகமுமு;, அர்த்த மண்டபமும், மகாமண்டபமும், நிருத்தமண்டபமும் ஆக இந்த நான்கு மண்டபங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்க வேண்டும். இந்தவருடமும் கும்பாபிசேகக்கனவு தகர்ந்து போனது. வேலைகள் பூர்த்தியடையாத நிலையில் எம்பெருமானை பிரதிஷ்டை செய்ய ஊர்ப்பெரியவர்கள் சிலர் விரும்பவில்லை. ஆனாலும் எம்பெருமான் கிருபையினால் நிருத்த மண்டப வேலைகள் பூhத்தியாகாத நிலையிலேயே 1939ம் ஆண்டு காhர்த்திகைமாதம், கும்பாபிசேகம் நடந்தேறியது. இது ஒரு சுவாரிசமான சம்பவமாகும். எப்பொழுது எது நடக்க வேண்டுமோ அப்பொழுது அது தானாகவே நடக்கும். இவையெல்லாம் கடவுள் செயல்.

1939ம் ஆண்டும் அண்மையில் (26-12-2008.) பெய்த கடும் மழைபோன்றதொரு மழை பெய்தது. எங்கும் வெள்ளம். விநாயகர் பாலஸ்த்தாபனம் செய்து வைக்கப்பட்டிருந்த தம்பமண்டபம் பதிவாகையால் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இப்படி வெள்ளத்தினுள் பிள்ளையார் இருப்பதுகண்டு அடியவர்கள் பலர் மனம் வருந்தினார்கள். இந்தச் சூழலில் உடனேயே பிள்ளையாரை பிரதிஷ்டை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதே கார்த்திகை மாதத்தில் ஓர் இரவு நேர சுபமுகூர்த்த வேளையில் ஸ்ரீ பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் கும்பாபிசேகம் நடந்தேறியது. ஆகமமுறைப்படி பதினொரு கும்பம் வைத்து அஷ்டபந்தன மகாகும்பாபிசேகத்தை; கோயிலின் பிரதமகுரு சிவஸ்ரீ சதாசிவக்குருக்கள் செய்துவைத்தார். இதனைத்தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிசேகமும் நடந்தேறியது. ஊர்மக்கள் எல்லோரும் ஆனந்தமடைந்தார்கள். இன்றுவரை இந்தக் கோயிலின் வளர்ச்சியையும் சிறப்பையும் பார்க்குமிடத்து இது ஒரு சிறந்த முகூர்த்தம் என இன்றும் இம்மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்.

கூடிவாழ்ந்தால் கோடிநன்மை. ஊர்சிறந்தால் கோயிலும் சிறக்கும். இதற்கு ஒவ்வொருவரினதும் உள்ளம் திறக்கவேண்டும். ஒற்றுமையும் தியாக சிந்தையும் உள்ள மக்கள் கூட்டம் ஒன்று இந்த கோயில் சிறக்க அரும்பாடுபட்டது. இது பொதுக்கோயில். ஊர்மக்களின் கோயில். எல்லோரும் ஒன்றுபட்டார்கள் இந்த கோயிலை முன்னேற்ற வேண்டும் என்று துடித்தார்கள். ஆனாலும் இந்த 1939ம் ஆண்டு கும்பாபிசேகத்துக்கு பின்பும் கோயில் திருப்பணி மெதுவாகத்தான் நடைபெற்றது. வறுமை. காசு இல்லை. கோயில் தம்பமண்டபம், நிருத்த மண்டபம் என்பன பூர்த்தியாகாமலே இருந்தது. இதனால் கொடி ஏறவில்லை, ஆகமவிதிப்படி வருடார்ந்த மகோற்சவம் நடைபெறவில்லை. வெறும் அலங்கார உற்சவமாகத்தான் நடைபெற்றது. நாளாந்தப் பூசைகள் கூட தாமதமாகத்தான் நடைபெற்றது. கோயிலுக்கென்று ஒரு குடை கூட இல்லாத நிலையில் எம்பெருமான் இரவல்க் குடையிலே வலம்வந்தார். ஒரு பணம் கொடுத்து யாரும் அர்ச்சனைகூட செய்யக்கூட முடியாத ஒரு நிலையில் கோயில்க் குருக்களையும் இந்த வறுமை பற்றிக்கொண்டது.

1945ம் ஆண்டு ஒரு நாள் கோயில் அர்ச்சகரான சதாசிவக் குருக்களிடம் வந்த அடியவர் சிலர் கோயில் பூசைநேரங்களில் ஏற்படுகின்ற காலதாமதம் பற்றிய வினா எழுப்பினார்கள். அதற்கு சதாசிவக்குருக்கள். “முன்னரெல்லாம் முப்பது நாட்களும் பூசை செய்வதற்குரிய ஒழுங்கினை செய்து தந்தார்கள். ஆனால் இப்போ ஒரு பணம் தந்து அர்ச்சனைசெய்ய யாரும் இல்லை. பூசைப் பொறுப்புக்களையெல்லாம் என்னிடம் தந்து விட்டார்கள். எனக்கு பலசோலி. கஷ்ரம் என்ன செய்ய?” என்று வினாவினார். பூசை செய்வதற்குரிய நைவெத்திய சாமான்களை தந்தால் பூசையை நேரத்திற்கு செய்வீர்களா? என்று அடியவர்கள் மீண்டும் கேட்க, ஐயர் அதற்கு சம்மதித்தார். அன்றில் இருந்து தினமும் வீடுவீடாகச் சென்று பிடி அருசி எடுக்கும் பணி தொடங்கியது. நித்தமும் கோயிலுடன் ஒன்றிப்போன அடியவர்கள் சிலர் தினமும் வீடுவீடாக சென்று அருசிசேர்க்கும் இப்பணியை செய்தார்கள். இதன்மூலம் கிடைக்கும் அருசியில் குருக்களுக்கு கொடுத்தவை போக, மிகுதியை விற்று அந்தப்பணத்தில் தேங்காய் எண்ணெய் வாங்கி விளக்கேற்றினார்கள்.

இப்படி எத்தனை காலம்தான் செய்வது. கோயிலுக்கு நிரந்தர வருமானம் ஒன்றை தேடவேண்டும் என நினைத்தார்கள். அதற்கு ஊரில் உள்ள சுருட்டுத்தொழிலாளர்களின் உதவியை நாடினார்கள். தினமும் சுருட்டுக்கொட்டில்களில் ஒரு கட்டு சுருட்டை பிள்ளையாருக்கென எடுத்து தனியாக வைத்துவிடுவார்கள். இப்படியாகச் சேர்த்த பணமும் போதாமையால் 1955ம் ஆண்டு கோயிலின் வடக்கு வீதியில் சிறிய ஒரு கட்டிடத்தை அமைத்து அதை “ஐக்கிய பண்டகசாலை” க்கு வாடகைக்கு வழங்கினார்கள். (தற்போதைய கூட்டுறவுச் சங்கம்.) அப்போதைய காலச்சூழலில் இந்த வாடகைப்பணம் கோயிலின் நித்திய கருமங்களுக்கு பெரிதும் உதவியது. அதன் பின் கோயிலின் உட்பக்க கூரைமாற்றி அமைக்கப்பட்டது. சுண்ணாம்பு தூண்கள் அகற்றப்பட்டு சீமெந்தில் தூண் போடப்பட்டது. முகடுபிரித்து நிலை,மரம் ஆகியன ஒழுங்காக இணைக்கப்பட்டன. முக்கியமாக தீபவிளக்கில் இருந்து மின்விளக்கிற்கு கோயில்மாறியது. கோயில் பிரகாசமாக காட்சியளித்தது. கோயிலுக்கு மின்சாரம் கிடைக்கப்பெற்றதும் இக்காலப்பகுதியில் ஆகும்.

முன்னைய உற்சவங்களுடன் 1956ல், இக்காலப்பகுதியில் புதிதாக சதுர்த்தி உற்சவம் தொடங்கியது. பன்னிரண்டு மாதங்களுக்குரிய வளர்பிறைச் சதுர்த்தி திதியில் அபிசேகஆராதனைகள் இடம்பெற்று விநாயகர் வீதியை வலம் வந்தார். அத்துடன் தைமாதம் சதுர்த்தியில் காப்புக்கட்டி தொடர்ச்சியாக புராணம் படிக்கப்பட்டு பங்குனி உத்தரத்தில் காப்பவுட்பு நிகழ்வுடன் திருக்குழுத்தியும் நடைபெறத்தொடங்கியது. ஊரில்உள்ள விநாயகர் அடியார்கள் எல்லோரும் அருசி,தேங்காய்,பருப்பு,மரக்கறி போன்ற சமையலுக்குரிய பொருட்களையெல்லாம் கொண்டுவந்து ஊர்கூடி சமைத்துப் படைத்து உண்பார்கள். ஊர்கூடி தேரிழுத்தல், ஊர்கூடி அன்னதானம் செய்தல் போன்ற ஒற்றுமையுணர்வுகளின் மைய இருப்பிடமாக இந்த கோயில் அந்தக்காலத்தில் இருந்தே திகழ்ந்துள்ளது.

கோயிலும், அதன் சூழலும் மெல்ல மெல்ல மாற்றங்காணத் தொடங்கியது. 1942ம்ஆண்டு கோயிலின் வடகிழக்குப் பக்கத்தில் (தற்போதைய இலக்குமி கோயில்) இருந்த திருமஞ்சரக் கிணற்றை மூடி சரியான இடத்தில் தற்போதைய திருமஞ்சனக்கிணற்றை அமைத்தார்கள்.. கோயிலின் தெற்கு வீதியில் இடிந்தும், பற்றையாகவும் இருந்த பழைய கேணியை மூடவேண்டிய சூழல் உருவானது. இந்த கேணியின் படிக்கட்டுக்கள் வடக்குப் பக்கமாக பழுதடைந்த நிலையில் மழைகாலங்களில் வெள்ளமும் புகுந்து தூர்ந்து போயிருந்தது. இதனால் கோயில் மடப்பள்ளியின் வெளிச்சுவர் கொஞ்சம் சரிந்துபோனது. தவிர அருகில் உள்ள பாடசாலைச் சிறுவர்கள் அதிகமாக உலாவும் இடம் ஆகையால் இந்த கேணியை மூடி அந்த இடத்தில் 1949ம் ஆண்டு, ஆவணிமாதம் “ஸ்ரீ கணேசா வாசிகசாலையை” அமைத்தார்கள். இந்த கேணியின் படிக்கட்டுக்களான வெண்கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு கோயில் கட்டிடவேலைக்கு பயன்படுத்தப்பட்டது.

கும்பாபிசேகம் - 1961

எமது கோயிலிலே காலத்துக்கு காலம் பல்வேறுபட்ட திருப்பணிகளை பல்வேறுபட்ட அடியவர்கள் செய்த வருவதை நாம் காண்கின்றோம். அந்த வகையில் இந்தக் காலப்பகுதியில் கோயிலில் சில திருப்பணிகள் அரங்கேறின. விக்கினேஸ்வரப் பெருமானினுடைய பாதாரவிந்தங்களைப் பற்றியோர் மேம்படத் தொடங்கினார்கள். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்தது. எல்லோரும் மனமுவர்ந்து திருப்பணிகளில் ஈடுபட்டார்கள். கூட்டுதல், துடைத்தல், மெழுகுதல், புல்லுவெட்டுதல். முதற்கொண்டு தினமும் விளக்கு வைத்தல் வரை எல்லாமே அடியவர்களினால் செய்யப்பட்டு வந்தன. இந்த நாளாந்த திருப்பணிகளைத்தவிர, கோயிலின் உள்வீதியில் வடமேற்கு மூலையில் வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியப்பெருமானுக்கு கோயில் ஒன்று அமைக்கப்பட்டது. புதிதாக வசந்த மண்டபம் கட்டப்பட்டது. வைரவர்கோயில் கிழக்குவீதியில் கட்டப்பட்டது. ஈசான மூலையில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டன. உட்கோயிலின் கூரைவேலைகள் செப்பனிடப்பட்டன. வர்ணம் பூசப்பட்டது.

Sri Pararasa Segara Pillaiyar Kovil is situated in Inuvil, which is around 4 miles from Jaffna town, and along the Inuvil – Manipay road. The temple has a history of over 600 years and had links with the kingdom of Jaffna. The presiding deity in the sanctum sanctorum is the Lord Pararasa Segara Pillaiyar. This temple was built during the 14-15th century by the Jaffna king Pararajasekaran. He had prayed at this temple before going on any mission. This temple is also known as Madaththu Vasal Pillaiyar Kovil.

Comments
Name:     Email:     Country:     CAPTCHA:   
facebook twitter
hit counters